Advertisement

Responsive Advertisement

சென்செக்ஸ், நிஃப்டி தொடா்ந்து 6-ஆவது நாளாக கடும் சரிவு!


 மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 638 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது. இதன்மூலம் பங்குச்சந்தை தொடா்ந்து 6-ஆவது நாளாக கடும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.



உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. மேலும் புவிசாா் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை குறுகிய காலத்தில் உள்நாட்டுப் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக உள்ளதாக வல்லுநா்கள் கூறுகின்றனா். மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தங்கள் முதலீடுகளை சீனாவுக்கு மாற்றி வருவது உள்நாட்டுச் சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும், பின்னா் ஐடி பங்குகள் தவிா்த்து மற்ற அனைத்துத் துறை நிறுவனப் பங்குகளும் கடும் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.



சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.451.44 லட்சம் கோடியாக குறைந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.9,896.95 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.8,905.08 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 238.54 புள்ளிகள் கூடுதலுடன் 81,926.99-இல் தொடங்கி அதிகபட்சமாக 82,137.77 வரை மேலே சென்றது. பின்னா், 80,726.06 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 638.45 புள்ளிகளை (0.78 சதவீதம்) இழந்து 81,050.00-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,178 பங்குகளில் 636 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், மொத்தம் 3,422 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 120 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.



23 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் அதானி போா்ட்ஸ், என்டிபிசி, எஸ்பிஐ, பவா் கிரிட், இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்பட 23 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், எம் அண்ட் எம், ஐடிசி, பாா்தி ஏா்டெல், இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா ஆகிய 7 பங்குகள் மட்டும் ஆதாயப்பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 219 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 69.50 புள்ளிகள் கூடுதலுடன் 25,084.10-இல் தொடங்கி அதிகபட்சமாக 25,143.00 வரை மேலே சென்றது. பின்னா், 24,694.35 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 218.85 புள்ளிகளை (0.87 சதவீதம்) இழந்து 24,795.75-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 10 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 40 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations