Advertisement

Responsive Advertisement

மத்திய அரசின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு.. தமிழகத்தில் உள்ளோர் அறிய வேண்டிய சூப்பர் விஷயம்

 
டெல்லி: கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலமாக தமிழகத்தில் 29 ஆயிரம் பேர் தொழில் பயிற்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 60 ஆயிரத்து 513 பேர் தொழில் பயிற்சி பெற்றுள்ளனர். 35 ஆயிரத்து 859 பேருடன் மத்திய பிரதேசம் 2-ம் இடத்திலும், 33 ஆயிரத்து 293 பேருடன் ராஜஸ்தான் 3-ம் இடத்திலும் இருக்கிறது.




கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களை மத்திய அரசின் கிராம மேம்பாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த நிறுவனங்கள் பல்வேறு பயிற்சிகளை அளித்து இளைஞர்களை சுயதொழில் தொடங்க ஊக்குவித்து தேவையான நிதி உதவி மற்றும் பயிற்சி அளித்து வருகிறது.

எப்படி வேலை செய்கின்றன: கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETI) நாடு முழுவதும் உள்ள முன்னணி வங்கிகளால் அந்தந்த மாவட்ட அளவில் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களின் நோக்கம் என்னவென்றால், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதே ஆகும். இளைஞர்களை சுயதொழில் தொடங்க ஊக்குவித்து, அவர்களுக்கு தேவையான நிதி உதவியும் மற்றும் சிறுதொழில் பயிற்சி ஆகியவற்றை வழங்குவதே ஆகும்.



இந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பல பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலமாக கடந்த 2023-24-ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 51 ஆயிரத்து 419 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கிராம மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.. கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலமாக அதிகம் பயிற்சி பெற்ற மாநிலங்கள் பட்டியலில் 60 ஆயிரத்து 513 பேருடன் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. 35 ஆயிரத்து 859 பேருடன் மத்திய பிரதேசம் 2-ம் இடத்திலும், 33 ஆயிரத்து 293 பேருடன் ராஜஸ்தான் 3-ம் இடத்திலும், உள்ளது.29 ஆயிரத்து 73 பேர் பயிற்சி பெற்று தமிழகம் 6-வது இடத்திலும் உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் பெண்களுக்கான எம்பிராய்டரி மற்றும் துணி ஓவியம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. பயிற்சி வகுப்பு 30 நாட்கள் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆர்வம் உள்ள நபர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.




இந்த பயிற்சிகளை தேசியமயமாக்கப்பட்ட எஸ்பிஐ, கனரா உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் வழியாகவே மத்திய அரசு செய்து வருகிறது. இந்த பயிற்சிகள் குறைந்தது 10 நாள்கள் முதல் ஒரு மாதம் வரை வழங்கப்படுகின்றன. பால் வளம் பெருக்குதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மெழுகு திரி தயாரித்தல், பெண்களுக்கான ஆடை வடிவமைத்தல், அழகு கலை பயிற்சி, இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பயிற்சி, செல்போன் பழுது பார்க்கும் பயிற்சி, டேலி, போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 

குறைந்தது 8- ஆம் வகுப்பிற்கு மேல் படித்தவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர முடியும். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சியின்போது பயிற்சியாளர்களுக்கு இலவசத் தங்குமிட வசதி, உணவு மற்றும் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள், பொருட்களும் வழங்கப்படுவது உண்டு. பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடிந்த பின்னர் அவர்களுக்கு தொழில் தொடங்க தேவையான அறிவுரைகளும் வழங்கப்படுகிறது. . சுயதொழில் தொடங்கும் முயற்சியில் எல்லாவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டு வருகிறது. தொழிற் பயிற்சி பெற்றவர்கள் அரசின் கடன் உதவி பெற வழிகாட்டப்படுகிறது. எனவே தொழிற்பயிற்சிகளை பெற விரும்புவோருக்கு கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் அற்புதமான விஷயம் ஆகும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations