Advertisement

Responsive Advertisement

'ஆன்-லைன்' பட்டா மனு நிராகரிப்பை தடுக்க நடவடிக்கை: 'இ- - சேவை' மைய ஊழியர்களுக்கு பயிற்சி

 
திருத்தணி:ஆன்-லைன் மூலம் பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் மனுக்கள் போதிய ஆவணங்கள், தவறான சர்வே எண் உள்ளிட்ட தகவலுடன் பதிவேற்றம் செய்வதால், அதிகளவில் மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுதும் இ-- சேவை மைய ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, மாவட்ட நிர்வாகம் புதிய முயற்சி எடுத்துள்ளது.



திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, ஆவடி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட ஒன்பது தாலுகா அலுவலங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தாலுகாக்களில் மொத்தம், அரசு மற்றும் தனியார் என, 895 இ- - சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த இ- - சேவை மையங்கள் வாயிலாக அரசு நலத்திட்ட உதவிகள், முதியோர் உதவித்தொகை, புதிய பட்டா கோருதல், பட்டா மாற்றம் மற்றும் பல்வேறு சான்றுகள் பயனாளிகள் விண்ணப்பித்து பெற்று வருகின்றனர்.




இந்நிலையில், விவசாய நிலம், வீட்டுமனைகளுக்கு பட்டா கேட்டு, விண்ணப்பங்கள் இ- - சேவை மூலம் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதில், பட்டா கோரும் மனுதாரர்கள் ஆன்-லைன் மூலம் இ- - சேவை மையங்களில், போதிய ஆவணங்கள் சமர்ப்பித்து பதிவேற்றம் செய்தால், நில அளவை துறையினர் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து, சரியாக இருக்கும் பட்சத்தில் மனுதாரருக்கு பட்டா ஆணை வழங்கப்படுகிறது.




ஆனால், சில மாதங்களாக ஆன்-லைன் வாயிலாக பட்டா கோரி விண்ணப்பிக்கும் மனுக்கள், அதிகளவில் நில அளவை துறையினரால் நிராகரிக்கப்படுகிறது.

உதாரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் மாவட்டம் முழுதும் பட்டா கோரி, 7,200 மனுக்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. இதில், '1,357 மனுக்களுக்கு பட்டா வழங்க முடியாது' என, நில அளவை துறையினரால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.




இதற்கு காரணம், இ - -சேவை மையங்களில் விண்ணப்பிக்கும் போது, ஆவணங்கள் முறையாக ஸ்கேன் செய்யாததால், பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது.

மேலும், இ - -சேவை மையங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் உரிமையாளர்கள், மனுதாரர்கள் கொடுக்கும் ஆவணங்களை மட்டும் கடமைக்காக பதிவேற்றம் செய்து, பணத்தை வசூலிக்கின்றனர்.




இதனால், பெரும்பாலான மனுக்கள் போதிய ஆவணம் இல்லை, சர்வே எண் தவறு, மொபைல்போன் எண் தவறு என, பல்வேறு காரணங்கள் கூறி நில அளவையாளர்கள் தள்ளுபடி செய்கின்றனர்.

இ - -சேவை மைய ஊழியர்கள் செய்யும் தவறுகளால், பல மாதங்களாக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சிலர் பலமுறை விண்ணப்பம் செய்தும், பட்டா கிடைக்காமல் விரக்தி அடைகின்றனர்.


இதை தடுக்கும் வகையில், கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் உத்தரவின்படி, மாவட்ட நில அளவை இயக்குனர், திருத்தணி, பொன்னேரி மற்றும் திருவள்ளூர் வருவாய் கோட்டங்களில் இ - -சேவை மைய உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், பட்டா விண்ணப்பித்தல் முறை குறித்தும், அங்கு நடைபெறும் தவறுகள் குறித்தும் விளக்கப்படுகிறது.




Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations