Advertisement

Responsive Advertisement

வெள்ளி தான் அடுத்த தங்கம்? இப்போது வாங்கினால் லாபத்தை மொத்தமாக அள்ள முடியுமா? ஆனந்த் சீனிவாசன் பளீச்

 
சென்னை: நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கத்தோடு சேர்ந்து இப்போது வெள்ளியும் மளமளவென உயர்ந்து வருகிறது. தங்கம் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத விலையை எட்டிவிட்ட நிலையில், பலரும் அதேபோல வெள்ளியிலும் முதலீடு செய்யலாமா என யோசிக்கிறார்கள். இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார்.




கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. நேற்றைய தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் சென்னையில் ரூ.7,120க்கு விற்பனையானது.

அதேபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.100ஐ தாண்டிவிட்டது அதாவது ஒரு கிலோ ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனையாகிறது. 99,990. இப்போது தங்கம் விலைக்கு இணையாக வெள்ளி விலையும் படுவேகமாக அதிகரித்து வருகிறது.





தங்கம் விலை: தங்கம் விலை உச்சத்தைத் தொட்டுவிட்டதால் அதை மக்களால் வாங்க முடிவதில்லை. இதையடுத்து மக்கள் பலரும் தங்கத்திற்குப் பதிலாக வெள்ளியை வாங்கலாம். அதாவது இப்போது எப்படி தங்கம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதோ.. அதேபோல வெள்ளியும் வரும் காலத்தில் புதிய உச்சத்தைத் தொடும் என்பதால் இப்போதே வெள்ளியை வாங்கலாமா என்பது குறித்து யோசித்து வருகிறார்கள். 

இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார். வெள்ளி நிச்சயம் தங்கத்தைப் போல உயர்ந்து கொண்டே இருக்காது என்று சொன்ன அவர் இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். "தங்கம் விலை ரூ.7000ஐ தாண்டிவிட்டது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்தை எட்டி பிடிக்கிறது. இதற்கு சில காரணங்கள் உள்ளன. முதலில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியைக் குறைத்துள்ளது.


உலக நாடுகள்: அதேபோல மற்றொருபுறம் உலகெங்கும் போர் நடந்து வருகிறது. ஒரு பக்கம் ரஷ்யா உக்ரைனோடு மட்டுமின்றி ஜப்பானையும் வம்பிழுத்து கொண்டு இருக்கிறது. ஜப்பானின் ஏர் ஸ்பேஸில் ரஷ்யா சென்றுள்ளது. அதேபோல இஸ்ரேல் ஹிஸ்புல்லா தகராறும் பெரிதாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளன. இரண்டும் உயர்வதால் வெள்ளியை அடுத்த தங்கம் என நினைக்க வேண்டாம்.



வெள்ளி விலை அடிக்கடி ஏறி இறங்கும். சமீப காலங்களில் மட்டும் வெள்ளி விலை இரண்டு முறை 70% வரை விலை குறைந்துள்ளது. வெள்ளிக்கு மற்ற பயன்பாடுகளும் உள்ளன. உதாரணமாகச் செமி கண்டெக்டர்கள், சோலார் பேனல்களில் வெள்ளி அதிகளவில் பயன்படுத்தப்படும். இதனால் வெள்ளியை நாம் தங்கத்தைப் போல ஒரு கரன்சியாக கருத முடியாது. வெள்ளி விலை உயரம்: குறுகிய காலத்தில் நிச்சயம் வெள்ளி ஏறும். நீங்கள் வீட்டில் வெள்ளியை ஏற்கனவே வாங்கி வைத்து இருந்தால்.. நிச்சயம் விலை அதிகரிக்கும். 


ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும். மறுபுறம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,500 தாண்டிவிடும் என்றே நான் நினைக்கிறேன். ஒரு கிராம் தங்கம் ரூ.7,500 + வரி என்று விற்கப்படும். இது நிச்சயம் நடக்கும். எப்போது நடக்கும் என்பதை நம்மால் துல்லியமாகச் சொல்ல முடியாது என்ற போதிலும் இது நிச்சயம் நடந்தே தீரும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்த 1.5 ஆண்டுகளில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8500ஐ வரை போக வாய்ப்பு இருக்கிறது. வேறுபாடு இதுதான்: தங்கம் விலை அதிகரிப்பதால் வெள்ளி விலையும் நிச்சயம் அதிகரிக்கும். 

ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வெள்ளி விலை குறைந்துவிடும். ஆனால், தங்கம் விலை குறையாது. அதுவே இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்" என்று தெரிவித்தார். இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.




Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations