Advertisement

Responsive Advertisement

கவலைப்படாதீங்க.. "இது" மட்டும் நடந்தால் தங்கம் விலை குறையும், ஆனால்.! ஆனந்த் சீனிவாசன் கொடுத்த ஷாக்

 
சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்தே வந்தது. சென்னையில் இப்போது 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7100ஐ தொட்டுவிட்டது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வேதனையில் உள்ளனர். இதற்கிடையே தங்கம் விலை குறைவது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டில் தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்றைய தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் சென்னையில் ரூ.7100க்கு விற்பனை செய்யப்பட்டது.



ஒரு சில மாதங்களில் தங்கம் விலை பல நூறு ரூபாய் அதிகரித்துவிட்டது. இதனால் தங்கத்தை வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இது குறித்து விளக்கியுள்ளார். தங்கம் விலை இப்போது உச்சத்தில் இருந்தாலும், அது எப்போதும் குறையவே குறையாது என்று சொல்ல முடியாது என்ற அவர், இதற்கான காரணங்களையும் பட்டியலிட்டார். 

அவர் தனது யூடியூப் வீடியோவில், "எப்போதும் எல்லா பங்குகளையும் ஒரே நிறுவனத்தில் முதலீடு செய்யக் கூடாது. அது நன்றாகப் போனால் ஓகே.. இல்லை என்றால் நமது சேமிப்பு மொத்தமாகப் போய்விடும். அதில் இருந்து மீண்டு வருவதே சிரமம். அதேபோல குறுகிய கால டிரேட்டிங் செய்வதும் ஆபத்தானது. எனக்குத் தெரிந்த ஒருவர் அப்படிச் செய்து தான் பெரியளவில் பணத்தை விட்டுவிட்டார். கடந்த 10, 15 ஆண்டுகள் சம்பாதித்த பணத்தை விட்டுவிட்டார். பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும். பாதுகாப்பான முதலீடு போரடித்தாலும் நாம் நமது முதலீட்டை இழக்க மாட்டோம்.



அதேநேரம் தங்கமே விழாது என யாரும் நினைக்க வேண்டாம். கடந்த 1980களில், அதாவது வெறும் 45 ஆண்டுகளுக்கு முன்பு, தங்கம் விலை 300 டாலரில் இருந்து 80% சரிந்தது. 20, 30 டாலருக்கு அது வர்த்தகமானது. அப்போது அமெரிக்க மத்திய வங்கியின் கவர்னர் பால் வோல்க்கர் வட்டி விகிதத்தை 20%ஆக உயர்த்தினார். இதனால் தங்கம் விலை ஒரேயடியாக 50%க்கு மேல் விழுந்தது. இன்று எந்தவொரு கவர்னருக்கும் இந்தளவுக்கு வட்டியை உயர்த்த துணிச்சல் இல்லை.

அமெரிக்காவில் எப்போதும் வட்டி விகிதத்தை உயர்த்தும் போது தங்கம் விலை விழுந்து இருக்க வேண்டும். கடந்தாண்டு வரை அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய போது தங்கம் விலை குறைந்தது. அந்த டிரெண்ட் தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென சீனா மற்றும் ரஷ்யா நாட்டு மத்திய வங்கிகளில் தங்கத்தை வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிட்டன.



கடந்தாண்டு வரை அமெரிக்கா வட்டியை உயர்த்திய போது, அனைவரும் தங்கம் விலை குறையும் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால், ரஷ்யாவும் சீனாவும் உள்ளே புகுந்து வாங்குவார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்போது ரஷ்யாவும் சீனாவும் தங்கத்தை விற்றால் தங்கம் விலை குறையும்.

ஆனால், அவர்கள் விற்பார்களா என்றால் வாய்ப்பு குறைவு தான். ஆனாலும் மார்க்கெட்டில் இருந்து எதுவும் தப்பாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். தங்கம் விலை குறையவும் வாய்ப்பு இருக்கிறது" என்றார். இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் யாரும் ஒரு பொருளாதார ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நிதி அல்லது முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெறவும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations