Advertisement

Responsive Advertisement

சுங்க கட்டணம் என்றால் என்ன? இந்தியாவில் ஏன் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது?


 சென்னை: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.



சுங்க கட்டணம் என்றால் என்ன? இந்தியாவில் ஏன் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்தும் நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.




நமது நாட்டில் மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்தில் நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கிய நகரங்கள் அல்லது மாநிலங்களுக்கு இடையே விரைவான பயணத்தை மேற்கொள்ளவும் சரக்குகளை எளிமையாக கொண்டு செல்லவும் நெடுஞ்சாலைகளின் தேவை அவசியமாகிறது.


விரிவான நெடுஞ்சாலை கட்டமைப்பு இருப்பதால்தான் நம்மால் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு வேகமாக செல்ல முடிகிறது. அது மட்டுமல்லாமல் பொருட்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக இடமாற்றம் செய்ய முடிகிறது.


இத்தகைய சாலைகளின் தரத்தை பாதுகாக்கும் பொருட்டு தான் சுங்க கட்டணம் என்பது வசூல் செய்யப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரை உலகிலேயே மிகப்பெரிய சாலை போக்குவரத்து அமைப்பைக் கொண்டிருக்கக் கூடிய நாடு. இப்படி நெடுஞ்சாலைகளை பராமரிக்க நாடு முழுவதும் 855 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.


இதில் 675 சுங்கச் சாவடிகள் பொது நிதியளிப்பு (Public funded) என்ற பிரிவிலும், மீதமுள்ள 180 சுங்கச் சாவடிகள் அரசின் சலுகை பெற்றவை(concessionaires) என்ற பிரிவிலும் இருக்கின்றன.




தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 இன் அடிப்படையில் தான் இந்தியாவில் சுங்க கட்டணங்கள் என்பது மாற்றம் செய்யப்படுகிறது. இரு மாநிலங்களுக்கிடையிலான நெடுஞ்சாலைகள் அல்லது மாநில அல்லது தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யக்கூடிய வாகனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை சுங்க கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. கார்கள், லாரிகள், பேருந்துகள் , சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது கிடையாது. ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவை வாகனங்கள், ராணுவ வாகனங்கள், அரசு வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.



சுங்க கட்டணம் என்பது சாலைகள் பராமரிப்பு, மேம்பாடு, முறையான கண்காணிப்பு ஆகியவற்றுக்காக வசூலிக்கப்படுகிறது . இதற்காகவே தான் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு அந்த தொகை மூலம் சாலை உட்கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.


இவ்வாறு வசூல் செய்யப்படும் சுங்க கட்டணங்கள் அனைத்து நெடுஞ்சாலைகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் நாம் பயணிக்க கூடிய வாகனம், நாம் பயணம் செய்யும் தொலைவு, நாம் பயணம் செய்யும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் சுங்க கட்டணம் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது.




பொதுவாக இந்த மாதிரியான சுங்கச் சாவடிகள் ஒரு சாலையின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ள முடியாது. அதாவது அதிகப்படியான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தாத வண்ணத்திலும் பாதுகாப்பானதாக இருக்கும் வகையிலும் தான் சுங்கச்சாவடிகளை கட்டமைக்க வேண்டும். சுங்கச்சாவடி அமைக்கப்படுவதால் அந்த பகுதியில் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு தான் இடமே தேர்வு செய்யப்பட வேண்டும்.

Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations